பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை
கேரளாவில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், 15 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த 44 வயது நபருக்கு 106 சிறை தண்டனை விதித்து கேரள மாநிலம் தேவிகுளம் விரைவு போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில், திருச்சூர் பகுதியை சேர்ந்த 44வயது நபர் அடிமாலி பகுதிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வேலைக்கு வந்துள்ளார். அங்கு ஹோட்டலில் பணிபுரியும் பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணின் மகள் தான் 15 வயதான மனவளர்ச்சி குன்றிய பாதிக்கப்பட்ட சிறுமி. அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் சமயங்களில் சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.
பின்னர், அந்த சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது தான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், தயார் அளித்த புகாரின் பெயரில் விசாரணையை துவங்கி, பின்னர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் திருச்சூரை சேர்ந்த 44வயது நபர் தான் குற்றவாளி என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
அதன் பின்னர், வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று, தேவிகுளம் விரைவு போக்ஸோ நீதிமன்றத்தில், நீதிபதி சிராஜுதீன் அமர்வு முன் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை, சிறுமிக்கு எதிரான போக்ஸோ, மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தமாக 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 60,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றவாளி 60 ஆயிரம் அபராத தொகையை கட்டினால், அது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு நிதியாக வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் மேலும் 22 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.