முழுமையாக மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சை மாவட்ட டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டு வந்த டெல்டா பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் மின்சார மோட்டார்கள் மூலம் விவசாய பணிகள் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைக்காததால் கோடை சாகுபடியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு பலன் அளிக்காததால் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே மரத்துறை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பனந்தாள் வைத்தீஸ்வரன்கோயில் செல்லும் சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.