நீர், மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி,ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களின் கோடை வெப்பத்தை தணிக்க அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்..
தமிழக முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர் பகுதிகள், மற்றும் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்கள் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தால் அமைத்து பழம், இளநீர் தர்பூசணி லெமன் ஜூஸ் உள்ளிட்டவைகளை கொடுக்க வேண்டும் என்று அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்புறம்,மல்லி பேருந்து நிறுத்தம்,கிருஷ்ணன் கோவில் பேருந்து நிறுத்தம், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், இன்பத்தமிழன், சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபிரபா முத்தையா, ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் ஆகாரங்கள் பல வகைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அவரது இல்ல திருமண விழாவிற்கான பத்திரிக்கையை ஸ்ரீ ஆண்டாள்,ரெங்கமன்னார் சுவாமிகள் முன் வைத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.