ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிய கரூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் குடும்பத்தினர் செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்காத, ஏ.சி.டி.சி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸ்வின் மணிகண்டன் குடும்பத்தினருக்கு டிக்கெட் தொகை 12 ஆயிரத்தை சேர்த்து, இழப்பீடாக 50,000 மற்றும் செலவுத்தொகை 5,000 என மொத்தம் 67 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது தொடர்பாக கரூர், சின்ன ஆண்டாங்கோவில் – திருப்பதி லே அவுட் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய அழைப்பாணையை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம், நுகர்வோர் ஆணையத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க தவறியதால், சேவை குறைபாடு என முடிவு செய்து, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பாரி மற்றும் உறுப்பினர் ரத்னசாமி இந்த ஆணையை பிறப்பித்துள்ளனர்.