ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் காட்டுத் தீ….
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டு தீ எரிந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, மிளா, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகை செடிகளும் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தில் அமைந்துள்ள விரியன் கோவில் பீட் என்ற பகுதியில் முழங்கால் முடிச்சான் பாறை என்ற இடத்தில் மாலை நேரத்தில் இடி விழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பற்றிய தீ சரணாலய பகுதி முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. இரவு நேரத்தில் தீ பிடித்ததால் அப்பகுதிக்கு தற்போது யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் தீ தானாகவே கட்டுக்குள் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மலைவாழ் மக்களின் உதவியோடு தீ எரியும் பகுதிக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.
திடீரென பற்றி எரிந்த காட்டுத் தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதற்கும் மற்றும் சிறிய வகை வனவிலங்குகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.