சவுக்கு சங்கர் மீது சேலத்தில் வழக்குப்பதிவு
சேலம் சைபர் கிரைம் காவல்துறையினரும், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில், சேலம் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கீதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ், வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூபா் சவுக்கு சங்கா் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து இருந்தனா்.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டி குறித்து கோவை சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் சுகன்யா அளித்தப் புகாரின்பேரில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ஆம் தேதி பின்னா் கோவை சைபா் கிரைம் காவலர்கள் கைது செய்தனா். பின்னா் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா். சவுக்கு சங்கரை 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.