பிளஸ் டூ தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகளை காவல் நிலையம் அழைத்து தலை வாழை இலை போட்டு விருந்தளித்து நெகிழ வைத்த போலீசார்
வடை,பாயாசம்,அப்பளம் காரக்குழம்பு சாம்பார் என உண்டு மகிழ்ந்து போலீசாரை பாராட்டிய மாணவ மாணவிகள்
புதுச்சேரியில் நெகழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6-ம் தேதி வெளியானது, இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் வளர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் ஆர்வமாக இருந்தாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு படி மேலாக சென்று மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் செய்த நெகழ்ச்சி சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அதாவது புதுச்சேரி திருபுவனை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், திருபுவனை காவல் நிலையத்திற்கு அழைத்த உதவி ஆய்வாளர் இளங்கோ, பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கௌரவப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் உதவி ஆய்வாளர் இளங்கோ தனது கையால் தலைவாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறு சுவையோடு பரிமாறி மாணவ மாணவிகளையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார். மாணவ மாணவிகளும் வயிறார உண்டு காவலர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதவி ஆய்வாளர் இளங்கோ….
வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும், தவறான பாதைக்கு யாரும் சென்று விடக்கூடாது என்று மாணவ மாணவிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த அளவிற்கு உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து பெற்றோர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது அவர்களை மறக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட உதவி ஆய்வாளர் இளங்கோ உங்களது எண்ணம் அனைத்தும் சாதிக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டும் நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.
பன்னிரண்டாம் வகுப்பில் சாதனை படைத்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் காவல் நிலையத்திற்கு அழைத்து பரிசுகள் வழங்கி தலை வாழை இலை போட்டு அறு சுவையோடு விருந்து வழங்கி கௌரவித்த காவலர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராட்டுகளையும் குவித்து வருகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகிறது.