திருவாரூரில் தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் ஆய்வு
திருவாரூரில் தனியார் பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்
திருவாரூரில் பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சாலைபாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இணைந்து ஆய்வு நடத்தினர். பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி , அவசரகால வழி , பேருந்தின் பின்புறம் கேமரா , உள்பகுதி கேமரா , தீ அணைக்கும் கருவி , வாகனத்தில் பிரேக் , ஹாரன் உள்ளிட்ட அனைத்து பராமரிப்பும் சரியாக உள்ளனவா என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் க்யூஆர்கோடு மூலம் மாணவ , மாணவிகளை வாகனத்தில் உள்ளனரா என பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய தானியங்கி சென்சார் கருவியை பார்வையிட்டு, அனைத்து வாகனங்களிலும் பள்ளி நிர்வாகத்தினர் பொருத்த நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.
இதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது….
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 70 தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 313 பள்ளி வாகனங்கள் சோதனை மேற்க்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் சோதனை நடைபெறும்.
தகுதிஇல்லாத வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கபடாது, அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகள்படி உள்ள வாகனங்களுக்கு மட்டும் சான்றுகள் வழங்கப்படும் , பள்ளிகள் தொடங்கும் முன்னே அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்க படும்.
அதேபோல் தனியார் பேருந்துகள் அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்காத பட்சத்தில் பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சோதனை செய்யப்படாத தனியார் வாகனத்தில் பள்ளி குழந்தைகள் ஏற்றி சென்றால் வாகனம் மற்றும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகளை ஓட்டுநர்கள் தெரிவித்தவுடன் பள்ளி நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பண்ணன், அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.