மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில்
தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், வேன்கள் என 142 வாகனங்களை செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அபிதாபானு திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி ஆகியோர் நேரடி பார்வையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமலை, மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த வாகனங்களின் ஆய்வின்போது வாகன ஓட்டுனர்களுக்கு கல்வித்துறை போக்குவரத்து துறை மருத்துவத்துறை போலீஸ் துறை ஆகிய துறைகளின் சார்பில் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், ஓட்டுனர்களுக்கு உடல் மற்றும் கண்மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்களில் பிரேக், வாகனத்தின் பிளாட்பார்ம், அவசர கதவு, முதலுதவி பெட்டி மற்றும் தீ அணைப்பான் கருவி உள்ளதா...? சிசிடிவி கேமரா இயக்கம், சாலையில் செல்லக்கூடிய அளவிற்கு சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் பராமரிக்கப்பட்டுள்ளதா..? என முழு சோதனை செய்து வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.