மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசம் தடை விதிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில்
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி கொடியேற்றம்நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதீன மடாதிபதியை பக்தர்கள் பல்லக்கில் தோளில் சுமந்து செல்லும் சிவிகாரோஹனம் எனப்படும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நாளை இரவு நடைபெறுகிறது.
மடாதிபதியை அலங்கரிக்கப்பட்ட சிவிகை பல்லக்கில் பக்தர்கள் அமர வைத்து விடிய விடிய ஆதின நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு விலக்கிக் கொண்டது.
தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நாளை இரவு நடைபெற உள்ள நிலையில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்று இணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ள நிலையில் சில அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.