மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் செய்த இளைஞர்களால் சர்ச்சை
மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் மோகத்தால் பைக் ரேஸ் நடத்தி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்த இளைஞர்களால் சர்ச்சை.
இன்றைய தலைமுறை இளைஞர்களும் பைக்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்லுமளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வது ஆகச்சிறந்த சாதனையாகவும் பிறரைக் கவரும் விஷயமாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தங்களது இருசக்கர வாகனத்தை தங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து அதிக ஒளி எழுப்பும் சைலன்சர் ஆகியவற்றை இணைத்து சாலையை அலற விட்டு அவற்றை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்து மகிழ்கின்றனர். சில வீடியோக்கள் வைரலாகி காவல்துறை கவனத்திற்கு சென்றால் மட்டுமே இதுபோன்று ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அதனை இளைஞர் ஒருவர் நடு சாலையில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரி முன்பாக இளைஞர் ஒருவர் வீலிங் செய்து அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்துள்ளார் அந்த வீடியோ காட்சிகளும் அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நம்மை சுற்றி அரங்கேரிக் கொண்டுதான் இருக்கிறது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 18 வயது நிரம்பாதவர்களே.
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் விதிமுறை ஜூன் 1-ஆம் தேதி நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
மேலும், ரூ.25,000 அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1,000 முதல் 2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைமதிக்கத்தக்க தங்களது உயிரை துச்சம் என எண்ணி சில இளைஞர்கள் சாலையில் பைக் சாகசம் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களை தாங்களே திருத்திக் கொள்வதே இதற்கு ஒரே தீர்வு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.