செம்பட்டி அடுத்த, எஸ்.பாறைப்பட்டி பகுதியில், சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள, மக்காச்சோளம் சோடை போனதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, மல்லையாபுரம், கெப்புசோலைப்பட்டி, கெண்டையம்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட இப்பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 100 ஏக்கருக்கு மேல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர்.
தற்போது விளைச்சலுக்கு வரும் தருவாயில் விவசாயிகள் அறுவடைக்கு தயாரானார்கள். அறுவடை செய்ய சென்றபோது, மக்காச்சோளம் கதிரில் மக்காச்சோளம் விளைச்சல் இல்லாமல் சோடையானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த, வேளாண்மை துறை அதிகாரிகள் மக்காச்சோளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூபாய் 60 ஆயிரம் செலவு செய்து, கடந்த நான்கு மாதங்களாக தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு, களை எடுத்து அறுவடைக்கு தயாரான போது, மக்காச்சோளம் இல்லாமல் சோடையானதால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.