பழனி அருகே விவசாய நிலத்தில் நுழையும் காட்டுயானைகளை வெளியேற்ற கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி,கோம்பைபட்டி ,வரதமா நதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாயிகள் மா, தென்னை, கொய்யா விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாய நிலத்திற்கு காட்டு யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் விவசாய பணிகளுக்கு செல்லும் மனிதர்களை வனவிலங்குகள் தாக்கி பலரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். வனவிலங்குகளால் விவசாயிகள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வனத்துறையை ஒத்துழைப்புடன் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.