புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 1029 வழக்கறிஞர்கள் வாக்களிக்கின்றனர்
தலைவர் பதவிக்கு 6-பேர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது
புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது.இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்களுக்கு இடையே பிரச்சனைகள் உருவானது ஆனால் அதையும் மீறி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் சென்னை உயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களுடன் தேர்தல் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 7-மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 1033 வழக்கறிஞர்கள் வாக்களிக்கின்றனர். தலைவர் பதவிக்கு அண்ணாதுரை, பாலசுந்தரம், பச்சையப்பன், ரமேஷ், சாய் ராஜகோபால், சுப்பிரமணியன், ஆகிய ஆறு பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்து மதி புவனேஸ்வரி, துணைத் தலைவராகவும் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பொது செயலாளர் பதவிக்கு 3-பேரும், பொருளாளர் பதவிக்கு 3 பேரும், இணைச்செயலாளர் பதவிக்கு 8-பேரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியும், புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலருமான செந்தில்குமார் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதி முடிந்தவுடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தலை பற்றி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.