ஓஎன்ஜிசி எரிவாயுக் கசிவை சரிசெய்வதற்கான பராமரிப்புப்பணி இன்று தொடங்கியது
அடியாமங்கலம் ஓஎன்ஜிசி குழாயை பார்வையிட்ட பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டதால், எரிவாயுக் கசிவை சரிசெய்வதற்கான பராமரிப்புப்பணி இன்று தொடங்கியது.
மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் 2015-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 2 ஓஎன்ஜசி கிணறுகள் மக்கள் போராட்டம் காரணமாக தொடங்கி நிலையிலேயே கைவிடப்பட்டது.
அதனை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க ஓஎன்ஜிசி முடிவெடுத்து, முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த அந்த பகுதியை அண்மையில் சுத்தம் செய்தது.
ஆனால் அங்கு ஓஎன்ஜிசி மீண்டும் துரப்பன பணியை தொடங்க உள்ளதாக ஓஎன்ஜிசி குற்றம் சாட்டி போராட்டம் அறிவித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட கிணற்றை அதிகாரிகளின் முன்னிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் பார்வையிட்டு, அதில் திருப்திகரமான உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணிகளை செய்ய அனுமதிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி குழாயை கோட்டாட்சியர் யுரேகா முன்னிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது, எரிவாயுக் கசிவு ஏற்பட்ட குழாயை ஓஎன்ஜிசி வல்லுநர்கள் காண்பித்து உடனடியாக அங்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.
மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட தளவாடப் பொருள்களின் விபரம் குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் கேட்டறிந்தனர்.
முடிவில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு 2 நாள் பராமரிப்புப் பணியாக இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.