பருத்தி கொள்முதலில் சிண்டிகேட் அமைத்து குறைவான தொகைக்கு ஏலம் கேட்ட வியாபாரிகள் அதிகாரிகள் துணையுடன் மோசடி நடைபெறுவதாக கூறி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்பனார்கோயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் ஆகிய நான்கு இடங்களில் வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது. இங்கு திருப்பூர் மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 7500 ரூபாய்க்கு அதிகமாக ஒரு குண்டால் பருத்தி விற்பனை செய்த நிலையில் தற்போது 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போய் உள்ளது. வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஏலத் தொகையை குறைவாக கேட்பதாகவும் இதற்கு கொள்முதல் நிலைய ஊழியர்கள் அதிகாரிகள் துணையுடன் விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று தெரிவித்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்பனார்கோயில் மேல முக்கூட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி பூம்புகார் பொறையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.