பாரத ஸ்டேட் வங்கி கிளையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
கடன் பெறாத விவசாயிகள் பலருக்கு கடன் கொடுத்ததாக நோட்டீஸ் அனுப்பிய மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி கிளையை கண்டித்து வங்கி முன்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெறாத விவசாயிகள் பலருக்கு கடன் கொடுத்ததாக நோட்டீஸ் அனுப்பியதை ஆய்வு செய்து கடனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாய கடன் மற்றும் வீட்டுக் கடன் பெற்றவர்களின் பெயரில் காப்பீடு செய்ய தவறி விட்டு இறந்தவர்கள் குடும்பத்தினரை கடன் கட்ட சொல்லி வலியுறுத்தும் செயலை கைவிட வேண்டியும் இறந்தவர்களின் பெயர்களில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்.
பாகசாலை சேமங்கலம் ஆழவெளி நத்தம் ஆகிய கிராமங்களில் தொடர் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகிய விவசாயிகளுக்கு கடனை கட்ட சொல்லி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை பாரத் ஸ்டேட் வங்கி கிளை முன்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் டி சிம்சன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்ததால் ஸ்டேட் வங்கி செல்லும் சாலையை காவல்துறையினர் தடுப்பு கட்டைகளால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் மூடி வைத்தனர். இதனால் வங்கிக்கு செல்வோர் காலை மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.