பாஜக தலைமையே ஆளும் அரசில் குழப்பத்தை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளதா
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து வெவ்வேறு வினோதங்கள் நடைபெற்று வருவதாகவும், ஆளும் கூட்டணி அரசில் பங்கெடுத்துள்ள பாஜகவில் வாக்களிக்கும் உரிமையில் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 5-க்கும் மேற்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கும், பாஜகவில் உள்ள அமைச்சர்களுக்கும் எதிராக குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் இது சம்பந்தமாக முதலமைச்சர், இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்று எதற்கும் பதிலளிக்காமல் ஒதுங்கி கொள்கிறார்.
பாஜக தலைமையும் இந்த விஷயத்தில் தலையிட்டதாக தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாஜக எம்.எல்.ஏக்களில் இருவர் அமைச்சராகவும், ஒருவர் சபாநாயகராக உள்ளனர்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என புரட்சி செய்யும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவை எதற்கும் பாஜக தலைமை எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.
மேலும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த அரசின் மீதும், பாஜக அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் போது பாஜக தலைமையும் இந்த விஷயத்தில் வாய்மூடி மவுனம் காக்கிறது. ஒன்று பாஜக தலைமையே ஆளும் அரசில் குழப்பத்தை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளதா என்று தெரியவில்லை என்றார்.
மேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அதிமுக சுட்டிகாட்டியது போன்று தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என கூறிய அவர், விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த பிரச்சனையை தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மீது பழியை போட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த விஷ சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்டது என ஒரு அபாண்டமான குற்றசாட்டை கூறினார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என கூறினார்.