புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை என்றும், வாரத்தில் 5 நாட்களும் மாணவர்களுக்கு சிறுதானியம், பிஸ்கட் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாணவர் நாள் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை தரம் உயர்த்தவும், பள்ளி முதல் கல்லூரி வரையும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர் நாள் விழா புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், எளிமையாகவும், விரும்பி கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொலிவுரு கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், தற்போது போட்டி அதிகரித்துள்ளதால் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தனியார் பள்ளி நன்றாக உள்ளது. நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். அங்கு படித்தால் தங்களது பிள்ளை நல்ல நிலைமைக்கு வருவார்கள் என்று எண்ணுகின்றனர். தனியார் பள்ளிகளில் வசதியுள்ள, பணம் உள்ளவர்கள் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்கள் ஏழை மக்களால் சேர்க்க முடியுமா? தற்போது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, ஒன்றாம் வகுப்புகளுக்கு 60,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த பள்ளிகளில் எப்படி சேர்க்க முடியும் அதனால் தான் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் ஆசரியர்கள் நியமித்து ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டும் கொடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். மேலும் நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளில் இடைநிற்றல் என்பது இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும், தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி இருக்க வேண்டும் அடிப்படை கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக 157 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது மாலை நேரத்தில் 2 நாட்கள் மட்டும் சிறுதானிய பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இது 5 நாட்களாக உயர்த்தி விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எங்கள் அரசு பொறுப்பேற்ற உடன் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் முன்பு ஓராண்டு வழங்கவில்லை. அந்த மாணவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு மடிக்கணினிக்கான தொகை அவர்களது வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என்றும், புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அனைவருக்கும் இலவச கல்வி என்ற நிலையில் பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
மேடைப் பேச்சு: ரங்கசாமி, முதலமைச்சர்.