அரசு அனுமதித்துள்ள நேரத்தை தாண்டி சாராயம் விற்பனை செய்வது மற்றும் அடையாளம் தெரியாத நபருக்கு சாராயம் மொத்தமாக விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
சாராயக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதுச்சேரி மேற்கு பிரிவு எஸ்.பி. வம்சிதரெட்டி கடும் எச்சரிக்கை.
புதுச்சேரி மேற்கு பகுதிகளான வில்லியனூர், மங்களம், திருபுவனை, காட்டேரிக்குப்பம், நெட்டப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வில்லியனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு பிரிவு எஸ்.பி வம்சித ரெட்டி
புதுச்சேரியில் உள்ள சாராய கடைகள் மூலம் சாராயம் விதிமுறைகளை மீறி வெளியில் அனுப்புவது, குறிப்பிடப்பட்ட நேரங்களை தாண்டி சாராயம் விற்பனை செய்வது, மற்றும், அடையாளம் தெரியாத நபர்களுக்கு அதிக அளவில் சாராயம் விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அரசு விதிமுறைகளை மீறி தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் சாராயக்கடை உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று குறிப்பிட்ட வம்சித ரெட்டி சாராயத்தின் மூலம் இறப்பு ஏற்பட்டால் சாராய கடை உரிமையாளர்களின் குடும்பமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
அரசு அனுமதித்துள்ள அளவை மீறி சாராயம் விற்பனை செய்தாலோ அல்லது போதை அதிகமாக இருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை 6:00 மணிக்கு திறக்கப்படும் சாராயக்கடைகள் இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள எஸ். பி. வம்சித ரெட்டி சாராயக்கடை உரிமையாளர்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாருமே லைசென்ஸ் எடுக்க முடியாத அளவிற்கு கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.