புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளுக்காக பேனர் கட்டவுட் வைத்த அக்கட்சி நிர்வாகிகள் மீது துணை மாவட்ட ஆட்சியரின் புகாரைத்தொடர்ந்து காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரியில் திறந்தவெளி பேனர் கட்டவுட் தடைச்சட்டம் 2010 லிருந்து அமலில் இருந்தபோதும் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கடையினர் என்று பாராமல் பரஸ்பரமாக பேனர் கட்டவுட்டுகளை வைத்து வந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மதிக்காமல் போனர் கட்டவுட்டுகள் அனைத்து கட்சிகள், அமைப்பினர், பிறந்தநாள், திருமண நாள் விழா, புதிய திரைப்படத்திற்கு என நகர் முழுவதும் பேனர் கட்டவுட்டுகளை குவித்து நகரின் அழகை கெடுக்கும் வகையில் அமைத்து வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில தலைமை நீதிபதி சந்திரசேகரன் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தலைமை செயலாளர், மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கும் உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டித்திருந்தார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம் புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் நேற்று முந்தினம் உத்தரவிட்டார்.
இதனிடையே தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழா நேற்று புதுச்சேரி தில்லை மேஸ்திரி வீதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. இதற்காக புதுச்சேரி காந்திவீதி, புஸ்ஸி வீதி பகுதியில் அக்கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பேனர் மற்றும் கட்டவுட் வைத்து பிறந்தநாள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் புதுச்சேரியில் பேனர் கட்டவுட் தடைச்சட்டம் அமலில் உள்ளதால் நகர பகுதியில் பேனர் வைத்திருந்தவர்கள் மீது துணைமாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.