அழகர் கோவில் ஆடித்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது..கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்..
மதுரை – மேலூர் அருகே உள்ள அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. கள்ளழகர் என்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் சமேத திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நான்கு ரத வீதிகளிலும் ஆடி அசைந்து வரும் சுமார் 60 அடி உயரம் கொண்ட திருத்தேரின் அழகினை காண மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்துள்ளனர். சுந்தரவல்லி தாயார் யானை முன்னதாக பவனி வர, செண்டை மேளம், நாதஸ்வரம் இசை ஒலிக்க,பக்தர்களின் பாண்டுரங்கா! பாண்டுரங்கா! என்ற பஜனை முழங்க அழகர்கோவில் ஆடிதிருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் பார்ப்பதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஆங்காங்கே அகன்ற எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து வசதிக்காக 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மதுரை,மேலூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்பட்டு வருகின்றன.