பழனி மலைக்கோயிலில் ஆடிமாதம் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பழனி மலைக்கோயிலில் ஆடிமாதம் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கத்தேர் புறப்பாட்டை பார்த்து பரவசமடைந்தனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
திங்கள்கிழமை ஆடி மாத கார்த்திகை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை தினம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அடிவாரம் கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு விதமான மலர்க்காவடி எடுத்தும், முருகனைப்போல வேடமிட்டும் ஆடிப்பாடி படிப்பாதை வழியாக மலையேறினர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. திடீரென மாலையில் கொட்டிய மழையில் பக்தர்கள் நனைந்தவாறே தங்கத்தேரில் அருள்மிகு சின்னக்குமாரசாமி உலா வருவதை கண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற குத்துவிளக்கு வழிபாடு நடைபெற்றது. ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது.
பக்தர்களுக்கான குடிநீர், பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.