நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய குளத்தின் நடுவே கிணறு வெட்ட அனுமதி வழங்கக் கூடாது – பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க காசிதர்மம் பகுதியில் உள்ள ராஜகோபாலபேரி குளத்தில் மூன்று கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அச்சன்புதூர் பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகாமையில் உள்ள கிராமமான காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரை சந்தித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தங்கள் பகுதியில் வசித்துவரும் பொதுமக்களுக்கு தேவையாக நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ராஜாகோபாலபேரி குளத்தில் இருந்து அச்சன்புதூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் எடுக்க மூன்று கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எங்கள் பகுதியில் உள்ள நீரை எடுத்து அருகாமையில் உள்ள பேரூராட்சி அச்சன்புதூர் பேரூராட்சி பகுதிக்கு விநியோகம் செய்யும் பட்சத்தில் தங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தங்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், அது மட்டுமில்லாமல் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள தங்கள் பகுதி இதன் மூலம் பெரிதளவும் பாதிக்கப்படும் எனவும் ஆகவே ராஜகோபாலபேரி குளத்தில் கிணறு வெட்ட அனுமதி வழங்கக் கூடாது என அவர்கள் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளது.