சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு…
சாலை ஓர கடைகளில் உணவு ருசியாக உள்ளது அதனால் கடைகளை அகற்றாமல் விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓர கடைகளை ஒழுங்குமுறை படுத்த வேண்டும்…
சாலையோர வியாபாரிகளின் திருவிழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு…
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மூலம் PM SVANidhi – சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையே புதுச்சேரி இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் PM SVANidhi திட்டத்தினை நடைமுறைப்படுத்த உறுதுணையாக இருந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சாலையோர வியாபாரிகளின் உணவுத் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவின் பொருட்கண்காட்சி துவக்க விழா கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்றது.
இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை தொடங்கிவைத்து விழாவில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உணவினை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ருசித்து சாப்பிட்டனர்..
இவ்விழாவில், புதுச்சேரியில் PM SVANidhi திட்டத்தினை நடைமுறைப்படுத்த உறுதுணையாக இருந்த புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி மற்றும் இந்தியன் வங்கி, நகர வாழ்வாதார மையம் ஆகியவைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சாலையோர வியாபாரிகளின் உணவு திருவிழா,
சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருட்கண்காட்சி, பிரதமர் ஸ்வாநிதி கடன் மேளா, டிஜிட்டல் மற்றும் வணிக பரிவர்த்தனை பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சி ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு முத்திரை வழங்கு வகையில் பூவை என்ற லட்ச்சினை வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…
புதுச்சேரியில் வணிகவரித்துறை மற்றும் கலால் துறை மூலமாக மாநில வருவாய் பெருகி வளர்ச்சி அடைந்த மாநிலமாக புதுச்சேரி உருவாகி உள்ளது என்று குறிப்பிட்ட அவர் தொழில்துறை கல்வி, சுகாதாரம் வேலை வாய்ப்புகளால் தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது என்று பெருமிதமாக தெரிவித்தார்.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி பெருகி வருகின்ற மாநிலமாக உள்ளது.சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் கிடைக்கும் உணவு ருசியாக உள்ளது இதனால் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓர கடைகளிலேயே விரும்பி சென்று சாப்பிட்டு வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தாமல் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் கடைகளை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்றார். சாலை ஓர வியாபாரிகளால் மாநில வருமானமும் பெருகி வருகிறது என்று குறிப்பிட்ட அவர் சாலையோர வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டத்தை பிரதம மந்திரி அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை பெற்று வியாபாரிகள் பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், அரசுச் செயலர் நெடுஞ்செழியன், உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.