தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் 8-வது உலக திரைப்பட விழா
திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் 8-வது உலக திரைப்பட விழா விமர்சையாக தொடங்கியது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் 8-வது உலக திரைப்பட விழா திருவாரூரில் இன்று தொடங்கி 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு விருதுகளை வென்ற தமிழ், ஆங்கிலம், ரஷ்யன், பாலஸ்தீனம், ஜப்பானீஸ், இட்டாலியன் உள்ளிட்ட பன்னாட்டு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இதனையொட்டி துவக்க விழா நிகழ்ச்சியாக திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினர் நாட்டுப்புற இசையுடன் பேரணியாக வந்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் திரையரங்கில் சென்று துவக்க விழா நடைபெற்றது.
இதில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை பறை இசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து உலக திரைப்பட விழாவின் முதல் திரைப்படமாக மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
படத்தைப் பார்த்த பிறகு படக்குழுவினர் ரசிகர்களிடம் கலந்துரையாடினர். அப்போது ரசிகர் ஒருவர் இந்த படம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் நடிகர் திலகம் சிவாஜி நடித்த வசந்த மாளிகை போல இந்த படம் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டார். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இத்திரைப்பட விழாவில் கவிஞர் நந்தலாலா, திரைப்பட நடிகை ரோகினி, தமுஎகச பொருளாளர் சௌந்தர்ராஜன், சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்றனர்.