திருப்பதி ஏழுமலையான், திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆகிய தெய்வங்களின் நெய்வேத்திய பிரசாத தயாரிப்பிற்கும் கலப்பட நெய்யே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பகீர் பேட்டி.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம், நைவேத்திய பிரசாதம் ஆகிவை தயாரிக்க தாவர கொழுப்பு, விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டது என்று சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டு, அதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஆகியவை தேச அளவில் பக்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் என்னை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக நியமித்த சந்திரபாபு நாயுடு என்னுடன் பேசும்போது திருப்பதி மலையில் லட்டு தரம், சுவை ஆகியவை சரியாக இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து லட்டு பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்படும் நெய்யின் தரத்தையும் ஆய்வு செய்ய அவர் அப்போது உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் இங்கு வந்து லட்டு பிரசாதம், இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய பயன்படுத்தும் அன்னபிரசாதம் ஆகியவற்றை ஆய்வு செய்ய போது அவற்றின் தரம், சுவை ஆகிவை சரியான முறையில் இல்லை என்பது தெரிய வந்தது.
மேலும் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்படும் நெய் தரம் குறைந்து இருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக லட்டு, அன்னப்பிரசாதம் ஆகியவற்றை தயார் செய்யும் ஊழியர்களிடம் பேசியபோது சரியான மூலப் பொருட்களை கொடுத்தால் நாங்கள் சுவையான பிரசாதத்தை சரியான முறையில் தயார் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் திண்டுக்கலை சேர்ந்த நிறுவனம் சப்ளை செய்த நெய் குஜராத்தில் உள்ள நேஷனல் டைரி டெவலப்மெண்ட் போர்டு ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து கிடைக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் அந்த நெய்யில் மாமிச கொழுப்பு, தாவர கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைத்த நாங்கள் அதன் பின் கர்நாடக அரசுக்கு சொந்தமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து தரமான நெய்யை வாங்கி சுவையான லட்டுக்களை தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினார்.
மேலும் கலப்பட நெய் சப்ளை செய்து நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம், நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்புவதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை பெற்ற பின்னர் மட்டுமே அனுப்பி இருக்கிறோம். எங்களிடம் ஆய்வறிக்கைகள் உள்ளன. எங்கள் மீது தவறு இல்லை என்று கூறுகிறது. எனவே இந்த விஷயத்தில் யார் கூறுவது உண்மை என்ற குழப்பம் நீடித்துள்ளது.