எங்களுக்கு ஃபேமிலி பேக்ரவுண்ட் கிடையாது.. இசைத்துறையில் சாதிக்க துடிக்கும் எங்கெங்கோ இருந்த எங்களை இணைத்தது இந்த இயற்கை.. பாய்ஸ் பட பாணியில் அசத்தி வரும் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள்
கல்லூரி படித்துக் கொண்டே தங்களை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவசமாக இசை நிகழ்ச்சியை நடத்தியும், விஷேச விழாக்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்தும் கல்லூரி கட்டணத்தை செலுத்தி, யாருடைய உதவியும் இன்றி தங்களுக்கான அடையாளத்தை தாங்களாகவே உருவாக்குவதையே லட்சியமாக வைத்து அசத்தி வருகின்றார்கள், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் கலைஞர்கள்… யார் இவர்கள்? என்ன செய்தார்கள்.. விரிவாக பார்க்கலாம் இந்த சிறப்பு தொகுப்பில்..
நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் வரம் என்பார்கள், அதுவும் ஒரே துறையில் சாதிக்கும் கனவை கொண்டிருப்பவர்கள் நண்பர்களாவது அதிலும் சிறப்பு தான்.. கல்லூரி விழாவில் ஏற்பட்ட எதிர்பாராத சந்தித்திப்பில் தொடங்கி, இன்று யார் இந்த இளைஞர்கள்..! என தஞ்சாவூர் மக்கள் மத்தியில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர் இந்த ஃபைன் டியூன் பாய்ஸ்..
தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பி.சிஏ,பிஏ.பி.காம்,எம்.காம், என வெவ்வேறு துறைகளில் பயின்று வரும் மாணவர்கள் தான்,சிவ சூர்யா,இன்ஃபன் ராஜ், ஜோஸ்வா, மெல்வின், ஸ்ரீராம்,சதீஷ்குமார் மற்றும் நவீன் குமார்.. பாடல் பாடுவது, இசை வாசிப்பது, பாடல் எழுதுவது என ஒவ்வொருவருக்கும் இசைத் துறையில் ஒரு தனித்திறமை உண்டு. கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில் சந்தித்த இவர்கள் தற்போது கடந்த ஒரு வருடமாக ஒன்றினைந்து தங்களின் இசைத் திறமையை வெளிக்கொணர, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் அசத்தி வருகின்றனர்.
இசைமேல் ஆர்வம் இருந்தாலும் ஏதாவது ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதற்காக, கூலி வேலை செய்து வரும், தங்களது பெற்றோரை எதிர்பார்க்காமல் இசை நிகழ்ச்சி நடத்த கிடைக்கும் வாய்ப்பின் மூலம் வரும் சொற்ப வருமானத்தை வைத்து, தங்களது கல்லூரி கட்டணத்தையும், முடிந்த அளவிற்கு வீட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இவர்களின் புதிய முயற்சியாக தஞ்சையில் உள்ள பல்வேறு கடைகளிலும் பொதுமக்கள் கூடும் இடத்திலும் உரிய அனுமதி பெற்று இலவசமாக இசை நிகழ்ச்சியை நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர்.
இப்படியான இந்த இளம் கலைஞர்களின் தொடர் கூட்டு முயற்சியின் விளைவாக, தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் வாரம் தோறும் நடைபெற்று வரும் “பூங்காவில் பூங்காற்று” நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.. இந்த நிகழ்ச்சி மூலம் இவர்களுக்கு வருமானம் கிடைக்க வில்லை என்றாலும் மக்களை சந்தோஷப்படுத்தவும் அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மாணவர்கள் பெருமிதமாக சொல்கின்றனர்..