வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி உறவினர் படுகாயம் – விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாலப்பட்டியை சேர்ந்தவர் மதுபாலன் வயது 23. இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரது நண்பர் சிவா. இவர்கள் இருவரும் நேற்று இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூர் அருகே உள்ள பாளையத்திற்கு வந்துவிட்டு மீண்டும் கடவூர் நோக்கி சென்றனர்.
இருசக்கர வாகனத்தை மதுபாலன் ஓட்டிச் சென்றார். சிவா பின்னால் உட்கார்ந்து சென்றார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள முத்தம்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் சென்றபோது எதிரே வந்த மகேந்திரா வேன் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதுபாலன் மற்றும் சிவா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மதுபாலன் பலியானார்.
சிவா தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.