அமலாக்கத்துறை சோதனையால் வைத்திலிங்கத்திடம் விசாரணை வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வைத்திலிங்கத்திடம் விசாரணையால் வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான. 2001 – 2006 வரை, தொழில் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 2011 – 2016 ல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். பிறகு 2016 – 2021, ஜூன் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். தற்போதும், ஒரத்தாடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.
வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், ஐ.டி., நிறுவனங்கள் கட்டவும் தீர்மானித்தது. இதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக, வைத்திலிங்கத்துக்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துறை போலீசார் கடந்த செப்.19ம் தேதி வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில், வைத்திலிங்கம், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில், அளவுக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதும் தெரிய வந்தது.
அவர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த, 2011 – 2016 காலகட்டத்தில், வைத்திலிங்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு, வாகனங்கள் வாங்கிய செலவுகள் என, அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கிட்டுள்ளனர்.
இதன்படி, 2011ல், 32.47 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது, 1,057.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அத்துடன், லஞ்சப்பணம், பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனம் வாயிலாக, வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, 2016 ஜனவரி, 28 முதல் பிப்., 4ம் தேதி வரை கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல், முறைகேடான பண பரிவர்த்தனை போன்ற அடிப்படையில், அமலாக்கத்துறையின் காலை சுமார் 7:30 மணிக்கு வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீட்டில் 5 கார்களில், 15பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வைத்திலிங்கம் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமான குவிந்துள்ளனர். மேலும், வைத்திலிங்கம் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தஞ்சை அருளானந்த நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள அவரது மகன் பிரபு வீட்டிலும் தமிழகத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.