நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கிறது என புகார் எழுந்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சாமிநாதன் புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் ஆய்வு செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் தாமிரபரணி ஆறு கலைக்கிறது. வற்றாத ஜீவநதியாக திகழும் இந்த ஆற்றின் மூலம் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது .மேலும் நெல்லை ,தூத்துக்குடி ,தென்காசி விருதுநகர், ராமநாதபும் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன .
குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கும் பயன்பெற்று வரும் தாமிரபரணி நதியானது சமீப காலமாக பாதாள சாக்கடை கழிவுகளும் நகர்ப்புற, கிராமப்புறங்களின் கழிவுகலால் மாசுபட்டு வருகிறது.
இதனால் பல்வேறு நோய்த் தொற்றுக்கு தாமிரபரணி தண்ணீர் மாறி உள்ளது. குடிப்பதற்கு உகந்தது அல்ல எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியில் சாக்கடை கலக்கக்கூடாது கரையோரம் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி அரசர்கள் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் நதியை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்கள்.
ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு நதியில் உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்யபோவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்றைய தினம் நெல்லைக்கு வருகை தந்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் நெல்லை சுற்றுலா மாளிகையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மற்றும் பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கழிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டார்
பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆர். சாமிநாதன் ,புகழேந்தி ஆகியோர் இன்று காலை தாமிரபரணி நதியை கரை பகுதிகள் , கழிவு நீர் கலக்கும் இடமான நெல்லை சந்திப்பு கைலாசபுரம், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள கால்வாய், சிந்துபூந்துறை, மற்றும் ராமையன்பட்டியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குறுக்குத்துறை ஆற்றுப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் மணிமாறன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.