தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயத்தில் ஆட்டுக்கறியுடன் ஊர் ஒற்றுமைக்காக அசன விருந்து..
130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் 1000 கிலோவுக்கும் அதிகமான ஆடுகளை வெட்டி பாரம்பரியபடி கிராமநலன் ஒற்றுமைக்காக அசனம் விருந்து நடைபெற்றது..
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையில் ஊர் அசனம் நடைபெறும்.
நூறு ஆண்டு காலத்திற்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி கிராம நலனுக்காகவும் மக்களிடையே ஒற்றுமை நிலவவும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சமையல் கலைஞர்களை வைத்து ஆட்டுகறி அசன விருந்து வைத்து வீடுகளுக்கு பாத்திரங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சுமார் 1000 கிலோ ஆட்டு இறைச்சி ஒன்றரை டன் அரிசி இரண்டு டன் காய்கறிகள் கொண்டு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள அதிசயபனி மாதா ஆலயம் மற்றும் புனித அந்தோனியார் ஆலயம் முன்பாக பந்தல் அமைத்து மிகப்பெரிய பாத்திரங்களில் சமையல் செய்யப்பட்டது. பின்னர் கத்தோலிக்க பங்குத்தந்தை ததேயூஸ் அடிகளார் ஜெபம் செய்த நிலையில் கோவில் தர்மகர்த்தா மரியராஜ் ஆசிரியர் அசன விருந்தை தொடங்கி வைத்தார்.
இதில் அப்பகுதி மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து தங்களது வீடுகளுக்கு சோறு ஆட்டுகறி குழம்பு குடல் பொரியல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.
நூறாண்டு பழமை வாய்ந்த அசனவிருந்து கிராம நலனுக்காக கத்தோலிக்க ஆலயத்தில் தொன்று தொட்டு பாரம்பரிய முறைப்படி இங்கு மட்டுமே நடைபெறுவது சிறப்பாகும்.