அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் எந்த பலனும் கடனும் பெற முடியாமல் இருந்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் ஆனாலும் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆனாலும் திமுக ஆட்சி காலத்தில் தான் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதித்துவம் காக்கப்பட்டுள்ளது, கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியல் சரிபார்ப்பு காரணமாகவே கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதில் காலதாமதமாகி வருவதாக நெல்லையில் நடந்த கூட்டுரவு வார விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவிய போட்டி உள்ளிட்டவைகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கோப்பை மற்றும் கேடகங்களையும் அமைச்சர் வழங்கி பாராட்டினார். பின்னர் விழாவில் பயிர் கடன் கால்நடை பராமரிப்பு கடன் மத்திய காலக்கடன் மகளிர் சுய உதவி குழு கடன் என 12 வகையான கடன் திட்டங்களின் கீழ் 698 பயனாளிகளுக்கு 8.42 கோடி காண காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு 1996 ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது எனக்கு கூட்டுறவு மற்றும் உணவு துறை வழங்கப்பட்டது.கலைஞர் ஆட்சி காலத்தில் தான் கூட்டுறவு துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது.கலைஞர் காலத்தில் ₹7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சட்டமன்றத்தில் சொன்னதற்கு அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ 5700 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சொன்னார்.கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை மூலம் எந்த பலனும் கடனும் விவசாயிகள் பெறவில்லை. கூட்டுறவு துறை தான் அனைத்து மக்களும் பயன்பெறும் துறையாக இருக்கிறது.திமுக ஆட்சியில் தான் பெண்களுக்காக 1000 பால்வள கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டது. நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச மின்சாரம்,மீனவர்களுக்கு இலவச டீசல் ஆகியவை வழங்கப்பட்டது.கூட்டுறவு துறையில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் தான்.கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பட்டியல் சரிபார்ப்பு காரணமாக தான் தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது.
கூட்டுறவு சங்க தேர்தல் ஆனாலும் உள்ளாட்சி தேர்தல ஆனாலும் திமுக ஆட்சிகாலத்தில் தான் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதித்துவம் காக்கபட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. கூட்டுறவு துறை மூலம் தான் அதிகளவில் மகளிர் சுய உதவிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டது.தீவிர டெப்பாசிட் வாரம் என முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் நடத்தப்பட்டு 2 வாரத்தில் 2 ஆயிரம் கோடி டெப்பாசிட் 1996ம் ஆண்டு பொதுமக்களிடம் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 4900 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது அதில் 1500 சங்கங்கள் தேசிய வங்கிகளுக்கு நிகராக மிகப்பெரிய டெபாசிட் தொகைகளோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு மிகமிகப்பயன்பெறும் துறையாக கூட்டுறவு துறை இருந்து வருகிறது.கூட்டுறவு மத்திய வங்கியில் நேரடி பணி நியமனம் முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் தான் செய்யப்பட்டது.கூட்டுறவு வங்கி தலைவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் அவர்களாகவே தேர்வு செய்துகொண்டனர். உறுப்பினர்கள் யார் யார் என்ற விபரங்கள் சரி பார்க்கக்கூடிய பணி தற்போது நடந்து வருகிறது பெயரளவிலேயே உறுப்பினர்கள் இருக்கிறார்களா உண்மையாகவே உறுப்பினர்கள் உள்ளனரா என்பது குறித்து சரி பார்ப்பதன் காரணமாகவே கூட்டுறவு தேர்தல் நடத்தப்படுவதில் காலதாமதம் இருந்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே எளிதில் கடன்களை பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்