செஞ்சி அடுத்த வடகால் – சின்னபொன்னம் பூண்டி சாலை பழுதடைந்துள்ளது சீர் அமைக்காததால் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் வடகால் – சின்னபொன்னம்பூண்டி செல்லும் சாலை பழுதடைந்து சீரமைக்காததால் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
செஞ்சி ஒன்றியம் கோனை ஊராட்சி வடகால் கிராமம் உள்ளது கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முக்கிய தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.
இவர்கள் இருக்கும் கிராமத்திலிருந்து நகரப் பகுதியான செஞ்சிக்கு சென்று வர சாலைகள் இல்லாமல் 30 ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல பஸ் வசதியோ சாலை வசதியோ இல்லாமல் இக்கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி சாலை மட்டுமே போடப்பட்டு இருந்து வருகிறது.
இப்போது இச்சாலை குண்டும் குழியுமாகி சேரும் சகதியும் ஆகி வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு உள்ளது. இச்சாலையில் பொதுமக்கள் விழுந்து விபத்து ஏற்பட்டுமருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
மேலும் கிராமத்தில் இருந்து கர்ப்பிணி பெண்களை அவசரத்திற்கு கூட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
ஒருபுறம் சின்ன பொன்னம்பூண்டி சாலையும், புதூர் கிராமத்திற்கு மறுபுறம் வன துறை ஏரி வழியாக செஞ்சிக்கு செல்லும் சாலையும் இருந்து வருகிறது.
இச்சாலை வழியாக சாலை அமைக்க வனத்துறை ஒப்புதல் அளிக்காததாலும் இதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததாலும் மறுபுறமும் சாலை அமைத்து செல்ல முடியாத நிலையில் இருபுறமும் இக்கிராம மக்கள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலகத்திலும் பலமுறை மனு மற்றும் கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் சின்னபொன்னம்பூண்டி – வடகால் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்,
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.