உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து ஏற்பாடுகள் தயார் ; முன்னேற்பாடுகள் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற தர்கா கந்தூரி விழா வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் அலங்கார வாசலில் துணை முதல்வர் உதயநிதியை தர்கா பரம்பரை ஆதினம் மஸ்தான் சாஹிப் குர் ஆன் கொடுத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். தொடர்ந்து திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அரசு சார்பாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி கூறுகையில் ; உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழக முதல்வரின் உத்தரவை அடுத்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். அனைத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பாக 45 கிலோ விலையில்லா சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டதற்கு தர்கா நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.
இந்தியா மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், தங்கும் விடுதி, வாகன நிறுத்தம், சிசிடிவி, மருத்துவ முகாம்கள், வாட்ஸ் டவர்கள் என அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கந்தூரி திருவிழாவில் அன்னதானம் வழங்குவோரின் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு தர அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் ஆட்டோக்கள் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெளிமாநில, வெளிநாடு பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து மொழிகளிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.