மணலூர் சுவாமி ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா
தஞ்சை மாவட்டம் மணலூர் சுவாமி ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா சரண கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் மணலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் சுவாமி ஐயப்பன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் சுவாமி ஐயப்பனுக்கு என்று தனி சன்னதி இங்கு மட்டுமே உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் வர்ண வேலைபாடுகளுடனும், சுதை வேலைப்பாடுகளுடன் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக திருவிழா கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகளுடன் மகா பூர்ணாஹூதியுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் விண்ணத்திரும் வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு தொடர்ந்து திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு சுவாமிகள், சிவராமபுரம் வாயு சித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மற்றும் ஆதீனங்கள் துறவியர்கள் திருமண கோயிலின் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களின் சரண கோஷத்துடன் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மணலூர் ஐயப்ப பக்த சமாஜ கமிட்டியினர் செய்திருந்தனர்.