நாகையில் தாளடி நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்
நாகையில் தாளடி நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்; குறுவை சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் தாளடி மகசூல் வேண்டி இயற்கையை வழிபட்டு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு குறித்த நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் பல கட்ட போராட்டத்திற்கு பின்பு விவசாயிகள் குறுவை பணிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும் அறுவடை நேரத்தில் பெய்த கனமழையால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை பயிர்கள் மழை நீரில் சாய்ந்து வீணானது. விவசாயிகள் பல கட்ட போராட்டத்திற்கு பின்பு அறுவடை பணிகளை முடித்து தாளடி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், பட்டமங்கலம், ராதாமங்கலம், கிள்ளுக்குடி, கடலாக்குடி, சாட்டியகுடி, வலிவலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் டிராக்டர் மூலம் சேற்று உழவு செய்து விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலாவது தாளடி விளைச்சல் இருக்க வேண்டும் என இயற்கையை வேண்டி நேரடி விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.