காற்று சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு பிறகு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வங்க கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மங்கைநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மிதமான சாரல் மழையாக பெய்து வருகிறது.
கடந்த 28-ம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது இதனால் பகல் நேரத்தில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழையின் அடுத்த சுற்று பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது.
மழை இன்றும் நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.