அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழா
அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சொக்கப்பனை தீபமும் அம்பாளுக்கு ருத்ர தீபமும் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனியே ராஜகோபுரத்துடன் கோயில்சன்னதிகள் அமைந்துள்ளன.
முன்னொரு காலத்தில் வேதசர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக்காரணமானவா். திக்கெல்லாம் புகழறும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும், பஞ்ச சபைகளில் தாமிர சபை இங்கு அமைந்திருப்பதும் ஆகிய பற்பல சிறப்புகள் நிறைந்தது இப்புண்ணிய திருத்தலம்.
இத் திருக்கோவிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சிறப்பாக காா்த்திகை தீபத் திருவிழா 2 தினங்கள் நடைபெறுகின்றது. திருவிழாவினை ஒட்டி திருக்கோவிலில் நேற்று மாலை சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று காலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. நன்பகலில் ஹோமம் வளா்த்து கலச பூஜைகள் நடைபெற்று சுவாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீ விநாயகா் மூஞ்சுரு வாகனத்திலும். வள்ளி தெய்வானை சமேத முருகா் மயில் வாகனத்திலும் சுவாமி அம்பாள் வௌ்ளி ரிஷப வாகனத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் செப்பு சப்பரத்திலும் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா். தொடர்ந்து சோடச உபசாரனை தீபங்கள் நடைபெற்றதும் கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாளுக்கு குடைவாயில் தீபாராதனை காட்டப்பட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுக்காக சன்னதி தெருவில் ஏழுந்தருளினாா்.
திருக்கோயில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபம் மங்கல வாத்தியங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு அதில் இருந்து தீபம் எடுத்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஓம் நமச்சிவாய நம என்ற கோசத்தோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதைப்போல் அம்பாள் சன்னதி முன்பு காா்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டதும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. காா்த்திகை தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீபத்தினை வணங்கினா்.