ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து, தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து, தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஹரியும் சிவனும் ஒன்று என்பதனை எடுத்துரைக்கம்வகையில் முந்தையகாலத்தில் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவலை இணைக்கும்வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டுவந்து காலப்போக்கில் நிறுத்தப்பட்டநிலையில், மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் வைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் ரெங்கவிலாச மண்டபத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், பட்டாச்சார்யர்கள் மற்றும் ஆலயத்தினர் பட்டுப்புடைவைகள், பீதாம்பரங்கள் மற்றும் வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை மங்கள வாத்தியங்களும், மேளங்களும் முழங்கிட கொண்டுவந்து, பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தின் உதவிஆணையர் செயல் அலுவலருமான சுரேஷ்மற்றும் அர்ச்சகர்களிடம் வழங்கினர்.
இந்த சிறப்பான நிகழ்வானது 200ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் தொடங்கியநிலையில், 6வது ஆண்டாக இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது, இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சீர்வரிசை ஊர்வலத்தில் பங்கேற்றுச்சென்று, பின்னர் அம்பாளுக்கு வழங்கப்பட்ட நிகழ்வினை கண்டு, அம்பாளையும் வழிபட்டுச்சென்றனர். இனிவரும் காலங்களில் இந்நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாத முடிவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.