உறிகட்டி சித்தர் 118 ஆம் ஆண்டு குருபூஜை ஆராதனை
குத்தாலம் அருகே உறிகட்டி சித்தர் 118 ஆம் ஆண்டு குருபூஜை ஆராதனை, குழந்தை வரம் வேண்டி சாதுக்களிடம் மடிப் பிச்சை உணவு வாங்கி தம்பதிகள் வினோத வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் 19ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சித்தர் ஒருவர் வசித்து வந்தார். பக்தர்கள் அளிக்கும் உணவை சுரை குடுக்கையில் கட்டி உத்தரத்தில் தொங்கவிட்டு இருப்பதால் உறிகட்டி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
பொதுமக்களின் நோய்களை பிரச்சனைகளை தீர்த்து வந்த அந்த மகான் 1906 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சித்தி அடைந்தார். அவருக்கு மாரியம்மன் கோவில் அருகே ஜீவசமாதி அமைந்துள்ளது. அமாவாசை தினத்தன்று அவருக்கு படையல் இட்டு குழந்தை வரம் உள்ளிட்டவை வேண்டுபவர்களுக்கு சித்தர் அருளால் குழந்தை வரம் கிட்டுவதாக ஐதீகம்.
உறிக்கட்டி சித்தரின் 118 ஆம் ஆண்டு குருபூஜை ஆராதனை இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகா ருத்ர யாகம் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த சாதுக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
அந்த அன்னதானத்தில் சாது சாப்பிடும் உணவில் மடிப் பிச்சை ஏந்தி உணவு சாப்பிடும் தம்பதிகளுக்கு குழந்தை வரும் கிடைக்கும் என்பதால் ஏராளமான குழந்தை இல்லா தம்பதிகள் மடிப் பிச்சை ஏந்தி வினோத வழிபாடு நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.