ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீகச் சுற்றுலா பயணத்தை சார் ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
பழனியில் இருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீகச் சுற்றுலா பயணத்தை சார் ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்லப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் செல்லும் இந்த ஆன்மீக பயணத்திற்கு திண்டுக்கல் கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 4 மண்டலங்களிலிருந்து 210 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் துவங்கியது.
பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை கோயில்களுக்கு நான்கு நாட்கள் செல்லும் இந்த ஆன்மீக பயணம் வரும் வெள்ளிக்கிழமை காலை பழனியில் நிறைவடையும்.
மூத்த குடிமக்கள் நான்கு நாட்கள் பேருந்து பயணம் மேற்கொள்வதால் பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ குழுவினர் உடன் அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுலா வளர்ச்சி கழகம் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட இவர்களுக்கு மூன்று நாட்கள் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்கள் இந்து சமய அறநிலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கோயில் துணை ஆணையர் பிரகாஷ் உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.