சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பயிர்கள்
அருப்புக்கோட்டை அருகே வடக்குநத்தம் கிராமத்தில் கனமழையால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அரசு இழப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் கண்ணீர் பேட்டி.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் மல்லி, உளுந்து, மிளகாய், பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழை காரணமாக கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஓடை வழியாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து வடக்கு நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களில் வெள்ள நீர் பாய்ந்து சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் வெங்காயம் மல்லி போன்ற செடிகள் பயிரிடப்பட்டிருந்த சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் பருத்தி பாசிப்பயறு கம்பு சோளம் உள்ளிட்ட விளைநிலங்களில் வெள்ள நீர் தேங்கி பயிர்கள் அனைத்தும் அழுகி நாசம் அடைந்துள்ளது. ஏக்கருக்கு சுமார் ரூ 40 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தாங்கள் இப்பகுதியில் வெங்காயம் மிளகாய் மல்லி, பருத்தி கம்பு சோளம் பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு இருந்தோம். கஞ்சம்பட்டி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஓடை வழியாக பாய்ந்து அனைத்து பயிர்களையும் அழித்து சென்றுவிட்டது. வடக்கு நத்தம் பகுதியில் உள்ள ஓடைப்பகுதி சுமார் 150 அடி அகலமாக இருந்தது தற்போது 25 அடியாக குறைந்துள்ளது. இந்த ஓடை சரியாக தூர்வரப்படாமல் உள்ளது.
இதனால் வெள்ள நீர் அனைத்தும் விளைநிலங்களில் புகுந்து பயிர்கள் அனைத்தும் அழிந்தது. பல ஆண்டுகளாக இதே நிலைமை தான் இருக்கிறது தொடர்ந்து நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். தற்போது ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
தங்க நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்த பணம் எல்லாம் வீணாகிவிட்டது. டிராக்டருக்கு மாதத் தவணை கட்ட கூட பணம் இல்லை. சென்ற முறை வெள்ளம் பாதித்த போது நிவாரண வழங்கவில்லை. இந்த முறையாவது அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க கூறினர்.