அண்ணா திடல் மற்றும் குபேர் பஜார் கடைகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு
புதுச்சேரியில் அண்ணா திடல் மற்றும் குபேர் பஜார் கடைகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கத்தையும் கடைகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரியின் 60 ஆண்டுகாள அடையாளமான விளங்கும் குபேர் பஜார் மற்றும் அண்ணா திடல் இயங்கி வந்தது இதனை சுற்றி 179 நகராட்சி கடைகள் இயங்கி வந்தன. திடல் முழுவதும் சிதலமடைந்த நிலையில், அண்ணா திடலை சுற்றியுள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, புதிய கடைகள் கட்டித்தர திட்டமிடப்பட்டதால் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை அகற்ற ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து, புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் அண்ணா திடலில் ரூ.9.6 கோடி மதிப்பீட்டில் திடலைச் சுற்றி கடைகள் 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற தொடங்கியது. இங்கு விளையாட்டு வீரர்கள் தங்க தனித்தனியே 14 அறைகள், 1000 பேர் அமரும் வகையில் கேலரி, அலுவலகம், பயிற்சிக் கூடம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதமே 75 சதவீத பணிகள் முடிவடைந்திருந்தன. விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் கேலரிகள் அமைக்கப்பட்டன. அத்துடன் அண்ணாதிடலை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்னும் பணிகள் முடிக்காமல் காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குபேர் பஜார் கடை உரிமையாளர்கள் கடைகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கத்தையும் கடைகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் இணை தலைமை செயல் அலுவலர் ருத்ரகௌடு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (Civil) ரவிச்சந்திரன், பொது மேலாளர் துளசிங்கம், மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்…