20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை
20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, நாகையில் சுனாமியின் போது உயிரிழந்தோரின் நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை; காப்பகத்தில் வளர்ந்து திருமணம் ஆகி அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகளை வாஞ்சையுடன் தூக்கி கொஞ்சி குலாவி பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ராதாகிருஷ்ணன்
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் நினைவாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி சுனாமி நினைவு தினம் 20 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, இன்று நாகை மாவட்டத்திற்கு வருகை வந்த, தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கீச்சாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு சென்று அங்கு உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி தீபமேற்றி, மலர் தூவி பிரார்த்தனை செய்தார்.
அதனை தொடர்ந்து சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற அவர் அங்கு சுனாமியின் போது பெற்றோர்களை இழந்து தங்கி பயின்று வளர்ந்து வந்த 40க்கும் மேற்பட்ட பிள்ளைகளை சந்தித்து பேசினார்.
இதில் அரசு காப்பகத்தில் தங்கி பயின்று தற்போது திருமணம் ஆகி குழந்தைகள் ஈன்றெடுத்த பெண் பிள்ளைகளை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தனர்.
அப்போது அவர்களின் குழந்தைகளை கைகளில் தூக்கி வாஞ்சையாக கொஞ்சி குலாவிய உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சிறுபிள்ளையாக காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அன்னாளின் நினைவுகளை அவர்களிடம் அசை போட்டனர்.
அதனைத் தொடர்ந்து சுனாமியில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை வழங்கிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறந்து 22, நாட்கள் ஆகி பெயர் வைக்காத ஒரு குழந்தைக்கு ராஜி என பெயர் சூட்டினார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து இன்று சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்த பிள்ளைகள் உயர்ந்து உள்ளனர் என்றும், இவர்கள் எமக்கு எடுத்துக்காட்டாக உந்துதலாகவும் உள்ளனர். சுனாமியின் போது என்னை அப்பா என அழைத்தவர்கள் இன்று பெரியவர்களாக வளர்ந்து திருமணம் ஆகி பிள்ளைகளை ஈன்றெடுத்துள்ளதால் என்னை தாத்தா ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர் எனக்கூறினார்.