புதுச்சேரி மாணவர்கள் முதலிடம்….தாரை-தப்பட்டை-ஆரத்தியுடன் வரவேற்பு
மத்திய அரசின் தேசிய கலாச்சார நடன போட்டி…புதுச்சேரி மாணவர்கள் முதலிடம்….தாரை-தப்பட்டை-ஆரத்தியுடன் வரவேற்பு…
நாடு முழுதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான கலாச்சார நடன போட்டி ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது.
இவ்வாண்டுக்கான போட்டி மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்றது. இதில் 23 மாநிலங்களை சேர்ந்த 440 மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் கடும் போட்டிகளுக்கு இடையே புதுச்சேரியின் அன்னை சிவகாமி பள்ளியின் 13 மாணவியரும் பிரசிடென்சி தனியார் பள்ளியின் இரண்டு மாணவர்களும் பங்கேற்ற புதுச்சேரி குழுவினர் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.
இவர்கள் தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், கரகாட்டம், சாட்டை ஆட்டம், குச்சி ஆட்டம், பறைஇசை, கேரள மாநிலத்தின் தையம், ஆந்திராவின் கைத்தாளம் ஆகியவற்றை படைத்து முதல் பரிசை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதலியார்பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி பள்ளி வளாகத்தில் இவர்களுக்கான வரவேற்பை ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் அளித்தனர்.
தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வெற்றி கோப்பையுடன் மாணவர்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.