வேடசந்தூர் அருகே கள்ளியடி குருநாதரின் 84வது குருபூஜை விழா பிரமாண்ட அன்னதானம்
வேடசந்தூர் அருகே கள்ளியடி குருநாதரின் 84வது குருபூஜை விழாவில் 3600 கிலோ அரிசியில் புளியோதரை பிரசாதம் தயார் செய்யப்பட்டு 20,000 பேருக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட அன்னதானம்
மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள பில்லிச்சேரியைச் சேர்ந்தவர் சபாபதி. இவர் கடந்த 1874-ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 16-வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள கள்ளி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.
அப்போது இந்த பகுதியில் மழை பெய்தபோது, அவர்மீது மட்டும் மழை நீர் படாமல் இருந்துள்ளது.
இதனைக்கண்டு ஆச்சரியமடைந்த ஊர்மக்கள் அவரிடம் ஏதோ சக்தி உள்ளதாக எண்ணி அவரை கள்ளியடி சுவாமிகள் என்று அழைத்து வந்தனர்.
அங்கு தங்கியிருந்த கள்ளியடி சாமிகள் ஊருக்கும், ஊர் மக்களுக்கும் பல நல்ல காரியங்களை செய்து வந்த அவர் கடந்த 1941 ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி ஜீவசமாதி அடைந்தார்.
அவர் நினைவாக ஊர் மக்கள் அந்த பகுதியில் கோவில் கட்டி ஆண்டு தோறும் வெகு விமரிசையாக குரு பூஜை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கள்ளியடி குருநாதரின் 84-வது குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கள்ளியடி குரு நாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவை முன்னிட்டு 3,600 கிலோ அரிசி, 500 கிலோ புளி, 300 கிலோ நிலக்கடலை, 35 டின் நல்லெண்ணெய், 55 டின் கடலெண்ணெய் உள்ளிட்ட பொருட்களால் புளியோதரை தயார் செய்யப்பட்டு ஒரு அறை முழுவதும் கொட்டி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் கோவில் வளாகம், ஊர் மந்தை மற்றும் சாலைகளில் அமர்ந்து பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டனர்.
டாட்டா ஏசி வாகனங்களில் அண்டாக்களில் எடுத்துச் சென்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது தன்னார்வலர்கள் ஓடி ஓடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த பிரமாண்ட அன்னதான நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.