திருக்கடையூரில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, மத்திய அரசு நிதி தரவில்லை என்று பழி போட்டு தப்பிக்காமல், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும், திருக்கடையூரில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் இன்று வருகை புரிந்தார். திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை வயல்களில் பார்வையிட்டு விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். அவரிடம் அழுகிய நெற்பயிரை காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமதி பிரேமலதா விஜயகாந்த்
பருவம் தவறிய மழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் முழு காப்பீட்டுத் தொகை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என பழி போட்டு தமிழக அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது எனவும், உங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் எனவும் பெரியார் அம்பேத்கர் போன்ற சரித்திரம் படைத்த தலைவர்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தேமுதிக சார்பில் விவசாயிகளுக்கு உளுந்து பயிறு விதைகளை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.