திருவையாறு டு அரியலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் தலித் மக்கள் குடியிருப்பு பகுதியை அகற்ற இருக்கும் நிலையில் இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சி, கஸ்தூரிபாய் இரண்டாவது வார்டில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை வாழ்வியலின் அடிப்படையாக கொண்டும், பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவையாறு இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக காலம் காலமாக வசித்து வரும் இந்த மக்களின் குடியிருப்பு பகுதியை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர உள்ளன. இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்து வந்த நிலையில், இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்த நினைக்கும் நெடுஞ்சாலை துறையையும், தலித் விரோத போக்கையும் அரசு அதிகாரிகளை கண்டிக்கிறோம் என வி.சி.கவினர் முழக்கங்களை எழுப்பி குடியிருப்பு பகுதியை அப்புறப்படுத்தாமல் இருக்கும் வரை தொடர்ந்து கஸ்தூரிபாய் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்தனர்.