in ,

கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம்

கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம்

 

ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், காந்திநகர், மாருதி நகர், மீனாட்சிபுரம், மில் கிருஷ்ணாபுரம், முத்துமாரி நகர், பி டி ஆர் நகர், வ உ சி நகர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பலர் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களாக உள்ளனர்.

திட்டமிட்ட வளர்ச்சி அடிப்படை வசதிகள், உயர் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார, மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என கூறி சமுசிகாபுரம் ஊராட்சியை ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குப்பை சேகரிப்பதற்கான சேவை உள்ளிட்ட வரிகள் பல மடங்கு உயர்த்தப்படும். மேலும் 100 நாள் வேலைத்திட்டமும் நிறுத்தப்படும்.

இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் அரசாணை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 20 கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் அரசு மேல் இடத்திற்கு தெரியப்படுத்தி விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விரைவில் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

விபத்தில் சிக்கிய அண்ணாச்சி